search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் ஆலையம்"

    சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், ஆலையை மீண்டும் திறக்க கோரியும் 45 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். #sterliteplant
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி பொது மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை காலவரம்பின்றி மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

    இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 உறுப்பினர்களை கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினர் நேரில் பார்வையிட்டும் ஆய்வு நடத்தியும் மக்கள் கருத்தை கேட்டும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    மூவர் குழுவினர் சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட்டனர். பின்னர் நேற்று முன் தினம் தூத்துக்குடியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

    அதன் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பினார்கள். நேற்று அவர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெற்றனர்.

    சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், ஆலையை மீண்டும் திறக்க கோரியும் 45 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுத்திருப்பவர்களில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், காண்டிராக்டர்கள், விவசாயிகள், கிராம மக்களும் அடங்குவர். இவர்கள் தங்கள் விருப்பம் உண்மைதான் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக மனுவுடன் தங்களது ஆதார் எண்ணையும் இணைத்துள்ளனர்.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு குழுவினரும் ஆலைக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள் வந்திருப்பதை உறுதி செய்தனர்.

    இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாய ஆய்வு கமிட்டியின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. #sterliteplant
    ×